ஆதார் செயலி இமெயில் அப்டேட் மூலம் வீட்டில் இருந்தபடியே இமெயில் முகவரியை அப்டேட் செய்யலாம் என UIDAI அறிவித்துள்ளது. எனவே, எப்படி ஆதார் செயலி மூலம் இமெயில் அப்டேட் செய்யலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்
இந்திய மக்களின் முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு இருக்கிறது. அரசு திட்டங்கள் முதல் வங்கி சேவைகள் என அனைத்திற்குமே ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக இருக்கிறது. ஆதார் கார்ட்டை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும். ஆதாரில் உள்ள பெயர், முகவரி, இமெயில், மொபைல் எண், போட்டோ போன்றவற்றை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும் என UIDAI வலியுறுத்தி வருகிறது.
ஆதாரில் உள்ள முகவரி, மொபைல் எண்ணை மாற்றுவதற்கு கூட ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை மக்களுக்கு எளிமைப்படுத்தும் வகையில், ஆதார் செயலி ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே ஆதாரில் உள்ள முகவரி, மொபைல் எண்ணை ரூ.75 கட்டணம் செலுத்தி அப்டேட் செய்து கொள்ளலாம். இந்தநிலையில், தற்போது முக்கியமான அப்டேட்டை UIDAI அறிவித்துள்ளது. ஆதார் செயலியில் இனி இமெயில் ஐடியை கூட அப்டேட் செய்யலாம் என அறிவித்துள்ளது.
பொதுமக்கள் ஆதார் மையத்திற்குச் செல்லாமலேயே, தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்தே நேரடியாக மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்கவோ அல்லது புதுப்பிக்கவோ முடியும். இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வந்த இரண்டு நாட்களுக்குள், 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது மின்னஞ்சல் முகவரிகளைப் புதுப்பிக்க இந்தச் செயலியைப் பயன்படுத்தியுள்ளனர் என்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆதார் செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் கிடைக்கிறது. இதனை பதிவிறக்கம் செய்து உங்கள் ஆதார் இமெயில் ஐடியை அப்டேட் செய்து கொள்ளலாம்.
ஆதார் செயலி மூலம் இமெயில் அப்டேட் செய்வது எப்படி?
முதலில் Aadhaar என்ற செயலியை பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இதன்பிறகு, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு லாகின் செய்து கொள்ளுங்கள்.
பிறகு முகப்பு பக்கத்தில் service என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், Email Add/Update என்ற ஆப்ஷன் இருக்கும்.
இதனை கிளிக் செய்து, உங்களது புது இமெயில் ஐடியை உள்ளிட்டால், இந்த இமெயில் ஐடிக்கு OTP வரும்.
அதனை உள்ளிட்ட பிறகு, face authentication-ஐ முடிக்க வேண்டும். இதன்பிறகு, உங்கள் இமெயில் ஐடி அப்டேட் செய்யப்படும்.
இமெயில் ஐடி அப்டேட் இலவசம்
ஆதார் செயலி மூலம் இமெயில் முகவரியை ஜூலை 1 முதல் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என UIDAI அறிவித்து இருந்தது. அதன்படியே, ஆதார் செயலி மூலம் இமெயில் முகவரியை எந்த கட்டணமும் செலுத்தாமல் இலவசாக அப்டேட் செய்து கொள்ளளலாம். இந்த வாய்ப்பை மக்கள் தவறவிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

