E20 பெட்ரோல் இன்னும் சோதனை நிலையில் இல்லை என்றும், வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பரவலான புகார்கள் எதுவும் இல்லை என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வழங்கும் E20 பெட்ரோல், இந்திய தர நிர்ணய அமைப்பின் தரச்சான்றுகளுக்கு முழுமையாக இணங்குகிறது என்றும், பெட்ரோல் மற்றும் எத்தனால் முழுமையாக கலக்கும் தன்மை கொண்டவை என்பதால், தரமான எரிபொருளில் அடுக்குகளாகப் பிரியும் பிரச்சினை ஏற்படாது என்றும் மத்திய அரசு விளக்கியுள்ளது.
20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) திட்டம் இன்னும் “சோதனை நிலையில்” இருப்பதாக வெளியான தகவல்களை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை வழக்கறிஞர் அலுவலகம் விளக்க அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், உச்சநீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி அளித்த வாதங்களை சில ஊடகங்கள் தவறாக வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனைத் திட்டம் இல்லை:
“எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டம் இன்னும் சோதனை நிலையில் உள்ளது என்றும், அதன் தாக்கம் அடுத்த ஆண்டு தெளிவாகும் என்றும் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை. உச்சநீதிமன்றத்தில் அத்தகைய எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை” என்று விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
விசாரணையின்போது, எத்தனால் ஒதுக்கீடு தொடர்பான ஒரே மாதிரியான வழக்குகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதால், அவற்றை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மட்டுமே தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே இடத்தில் விசாரிக்கப்படுவதன் மூலம் முரண்பட்ட தீர்ப்புகள் வருவதைத் தவிர்க்கவும், ஆண்டு முழுவதும் எண்ணெய் நிறுவனங்களுக்கு 20 சதவீத எத்தனால் கலவையுடன் பெட்ரோல் வழங்கும் தேசியத் திட்டம் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதே நோக்கம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாகனங்களுக்கு பாதிப்பு இல்லை:
இதற்கிடையே, நாடு முழுவதும் பெட்ரோல் நிலையங்களில் E20 பெட்ரோல் பயன்படுத்த வேண்டாம் என்ற எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களையும் மத்திய அரசு மறுத்துள்ளது. “E20 பெட்ரோல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, எத்தனால் கலவையால் என்ஜின் பழுது அல்லது வாகனக் கோளாறு ஏற்பட்டதாக பரவலான புகார்கள் எதுவும் பதிவாகவில்லை” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வழங்கும் E20 பெட்ரோல், இந்திய தர நிர்ணய அமைப்பின் தரச்சான்றுகளுக்கு முழுமையாக இணங்குகிறது என்றும், பெட்ரோல் மற்றும் எத்தனால் முழுமையாக கலக்கும் தன்மை கொண்டவை என்பதால், தரமான எரிபொருளில் அடுக்குகளாகப் பிரியும் பிரச்சினை ஏற்படாது என்றும் மத்திய அரசு விளக்கியுள்ளது.
அதேநேரம், E20, E22, E27, E30 போன்ற அதிக எத்தனால் கலவை கொண்ட எரிபொருட்களுக்கு கலால் வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பது, அவற்றை உடனடியாக நாடு முழுவதும் அமல்படுத்துவதாக அர்த்தமல்ல என்றும், விரிவான ஆய்வு மற்றும் ஆலோசனைக்குப் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

