கரூர் சம்பவம் தொடர்பாக தவறாக பேசிய ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாக திமுக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”அதிமுகவை சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களுடைய இணைப்பு விழாவில் நேற்று ஆதவ் அர்ஜுனா ஒரு பொறுப்பற்ற முறையில் பேசியது மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்களுக்கு ஆத்திரம் ஏற்படுத்தக் கூடிய வகையில் நேற்றைய தினம் பேசி இருக்கிறார்.
கரூரில் நடைபெற்ற சம்பவத்தைப் பற்றி அவர் பொய்யும் புரட்டுமாக பேசியுள்ளார். கரூருக்கு இடைத்தேர்தல் வர இருக்கிற காரணத்தினால் கருரூரின் சட்டமன்ற உறுப்பினர் தவெகவில் சேர்ந்துள்ள காரணத்தினால் அந்த தொகுதியில் மக்களுடைய கவனத்தை திசைத்திருப்பும் நோக்கத்தில் நேற்றைக்கு பேசியிருக்கிறார். கரூரில் நடைபெற்ற அந்த சம்பவத்தில் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த காரணத்தினால் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு, அவர் எடுத்த நடவடிக்கையை மனசாட்சி உள்ளவர்கள்; அரசியல் தெரிந்தவர்கள்; அரசியல் புரிந்தவர்கள் அத்தனை பேருமே பாராட்டினார்கள்.
விஜய்யை போல 41 பேர் செத்தபோது ஓடிவிடவில்லை. இந்த வழக்கை விசாரிப்பதற்கு நேர்மையாக எங்கள் தலைவர் சிறப்பு குழு அமைத்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இவர்களே தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று சொன்னார்கள். நாங்கள் நியமித்த அதே அதிகாரியைதான் விஜய் இன்னைக்கு இன்டெலிஜென்ஸ் அதிகாரியாக போட்டிருக்கிறார். ஆக நடுநிலையோடு திமுக ஆட்சியில் நடந்து கொண்டார்கள் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு எதுவும் தேவையில்லை.
இன்டெலிஜென்ஸ் என்பது காவல்துறையில் மிக மிக மான முக்கிய பொறுப்பு. அந்த இன்டெலிஜென்ஸ் துறையின் தற்போதைய அதிகாரியை தான் நாங்கள் இந்த கரூர் சம்பவத்தை விசாரிப்பதற்கு எங்களுடைய ஆட்சி காலத்தில் நியமித்தோம். எனவே எல்லா வகையான விசாரணையும் ஒழுங்காக நடைபெற்றது. ஆனால் அவர்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டார்கள். அதன்படி சிபிஐ விசாரணையும் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நேற்று பேசிய ஆதவ் அர்ஜுனா அக்யூஸ்ட் நம்பர் 2. அக்யூஸ்ட் ஆக இருக்கக்கூடிய ஆதவ் அர்ஜுனா நேற்றைக்கு சட்டம் தெரியாமல், நீதிமன்ற நடவடிக்கை புரிந்து கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது என்பதை அறியாமல் பேசியுள்ளார். இந்த வழக்கு ஓய்வுபெற்ற ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணையில் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் சொன்னது. தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய் இரண்டு முறை விசாரணைக்காக போய்விட்டு வந்தார்.
புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், விஜய்யினுடைய பொலிடிகல் அட்வைசர் ஜெகதீஸ் பழனிச்சாமி ஆகியோர் இதில் அக்யூஸ்ட்டுகள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வழக்கை பற்றி ஒரு அக்யூஸ்ட் விசாரணையை கெடுக்கின்ற வகையில் நேற்றைய தினம் பேசியிருக்கிறார்கள். ஆகவே சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் என்ற முறையில் நான் பெட்டிஷன் தாக்கல் செய்ய இருக்கிறேன். ஆதவ் அர்ஜுனா ஆட்டத்திற்கு எல்லை இல்லாமல் போகிறது. அவர் யாரென்று இந்த நாட்டுக்கு தெரியும்” என்றார்.

