நீட் குறித்து அமைச்சர் மரிய வில்சன் பேச்சு நீட் தேர்வுக்கு நிரந்தரத் தீர்வை 2029 மக்களவைத் தேர்தலின் மூலம் கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடலில் ஊழல் பட்டியல் ஆவணங்களுடன் வெளியிடப்படும் என்று அமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார்.
சென்னை பிராட்வேயில் 10 – 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பேசிய ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், “மக்கள் எனக்காக வாக்களிக்கவில்லை. தளபதிக்காகவே வாக்களித்தார்கள். அதுபோல தான், 234 தொகுதிகளிலும் மக்கள் தலைவர், தளபதிக்காக மட்டுமே வாக்களித்தார்கள். நாங்கள் என்ன செய்கிறோமோ, அதையெல்லாம் தலைவர் கவனித்து வருகிறார்.
முதலில் குடும்பம், அதன்பிறகே தொழிலை கவனிக்க வேண்டும். அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சதவீதத்தை மக்களுக்காக செலவு செய்ய வேண்டும். ஆனால் எந்த காரணத்திற்காகவும் கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தும் தலைவர் தான் எங்களுடைய முதலமைச்சர்.
ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், பெரிய நட்சத்திரமாகவும், முதலமைச்சராகவும் இருந்தாலும், ஒரு சாதாரண தொண்டருடன் கூட ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் அமர்ந்து பேசுவார். அவரது குடும்பம் எப்படி இருக்கிறது, தொகுதி எப்படி இருக்கிறது, மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்டறிவார். அந்த உயர்ந்த பண்புடைய தலைவர் தான் நம் முதலமைச்சர்.
தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்து எங்களுக்கு வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் காப்பாற்றத் தவறமாட்டோம். நானோ, அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ, நிர்வாகிகளோ யாரும் தவறு செய்யமாட்டோம். ஏனெனில், எங்கள் மீது நம்பிக்கை வைத்துத்தான் தளபதி எங்களை வேட்பாளர்களாக அறிவித்தார்” என்றார்.
தொடர்ந்து பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், “பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் ஊழலற்ற அரசு, தூய்மையான மற்றும் வெளிப்படையான அரசு என்பதே எங்களுடைய அரசின் நோக்கம் என்று தெரிவித்தார். மாணவர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் வாழப்போகும் சூழலுக்கான அடித்தளத்தை நமது தலைவர் அமைத்து கொண்டிருக்கிறார்.
எதிர்காலத்தில் ஊழல் என்ற வார்த்தையே தெரியாத வகையில், ஒரு நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு. திறமை அடிப்படையில் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறி வெற்றி பெறும் சூழலை உருவாக்கி வருகிறோம்.
இந்தியாவிலேயே முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சகத்தை தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கிறார். நீட் தேர்வுக்கு எதிராக Ban Neet என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
2026-ல் தமிழ்நாட்டில் பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டதை போலவே, நீட் தேர்வுக்கு நிரந்தரத் தீர்வை 2029 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலின் மூலம் நமது தலைவர் கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதை இந்தியா முழுவதும் பார்க்க போகிறது. அதன்பிறகு நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும்” என உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சிலர் மனசாட்சியே இல்லாதவர்களை போல நடந்துகொண்டதை பார்த்தேன். கட்சி நிதி என்றால் என்ன? என்று தெரியாதது போல நடித்து வெளியே சென்றார்கள். அவர்களுக்கு இந்த மேடையின் வாயிலாக ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
ஊழல் தொடர்பான முழுமையான தணிக்கை அறிக்கையை ஆவணங்களுடன் தயாரித்து வருகிறோம். வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அந்த அறிக்கை வெளியிடப்படும். பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஊழல் தொடர்பான அறிக்கைகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருக்கும். வரப்போகும் நாட்களில் தமிழ்நாடு வளர்ச்சியை மட்டுமே நோக்கிச் செல்லும்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சனிடம் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என கூறினீர்களே என நிரூபர் எழுப்பிய கேள்விக்கு, “கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அவர்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள், என்னென்ன செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் உரிய நேரத்தில் வெளிப்படுத்தப் போகிறோம்.
கடவுளின் அருளால் எல்லாமே நல்லபடியாக நடக்கும். அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். சில விஷயங்களை முன்கூட்டியே வெளியிட முடியாது. அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்- ‘Wait and Watch’ கொஞ்சம் பொறுமையாக இருங்கள்” என்றார்.
தவெக அரசின் முதல் பட்ஜெட் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு, “கவலைப்பட வேண்டாம். அனைத்து அறிவிப்புகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உரிய நேரத்தில் அறிவிப்பார்கள். முதலமைச்சரின் அறிவிப்புகளுக்காக காத்திருங்கள்” எனக் கூறினார்

