ஆடி மாத பௌர்ணமியில் 14 கிலோ மீட்டர் கிரிவலம் முடித்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டம். உலகப் பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திகழக்கூடிய திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையே சிவனாக வீற்றிருக்கக்கூடிய மலையைச் சுற்றி கிரிவலம் வருவது வழக்கம்.
அதுபோல் ஆடி மாத பௌர்ணமி முன்னிட்டு நேற்று இரவு முதலே மதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆன்மீக பக்தர்கள் ஆடி மாத பௌர்ணமிக்கு கிரிவலம் வரத் தொடங்கினர்.
தற்போது கிரிவலம் முடித்து மீண்டும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, மார்க்கமாக திருப்பதி வரை செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்காக பயணிகள் காத்திருந்தனர்.
மேலும் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் தங்களுடைய செல்போன் மற்றும் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும் தங்களுடைய பிள்ளைகளை கைகளில் பிடித்துக் கொண்டு ரயிலில் ஏறவும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.
தொடர்ந்து ரயில் வரும்போது மஞ்சள் கோட்டிற்குள் நிற்கும்படி ரயில்வே போலீசார் அறிவுறுத்தினர் மேலும் கயிறு கட்டி பயணிகள் ரயிலில் இருந்து இறங்கிய பிறகு ரயிலில் ஏறும் பயணிகளை அனுமதித்தனர் இதனால் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.

