பத்திரப்பதிவுத் துறையில் முன்பு அமைச்சராக இருந்த மூர்த்தி ‘மினிஸ்டர் கட்டிங்’ என பணம் வாங்கினார். ஒவ்வொரு அலுவலகத்திலும் 2 ஆள் போட்டு ‘மினிஸ்டர் கட்டிங்’ என தொகையை வசூலித்தார்.” என தவெக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் உன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேசுகையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்கின்றன. அடுத்த ஒரு வருடத்தில் அதிமுகவும் திமுகவும் கட்சி நடத்த முடியாமல் பாஜகவுடன் கட்சியை இணைத்துவிடும். அதோடு, ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தில் இரண்டு கேபினட் அமைச்சர்கள் வாங்கிக் கொள்ளும் முடிவுக்கும் வரலாம். அவர்களுக்கு கட்சியை நடத்தும் எண்ணமோ, காப்பாற்றும் எண்ணமோ இல்லை.
எம்ஜிஆர் , ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி அடமானம் வைத்துவிட்டு, இப்போது என்ன செய்வது எனத் தெரியாமல் இருக்கிறார். ஒரு கட்சி, ஒரு கட்சி அலுவலகம், ஒரு லெட்டர் பேட் மட்டும் இருந்தால் போதும் என்று தனது காலத்தை தள்ளக்கூடிய இடத்துக்கு அவர் வந்துவிட்டார். ஸ்டாலினும் அடுத்து என்ன செய்வது.. அடுத்து கட்சியை யாரிடம் கொடுப்பது எனத் தெரியாமல் நிற்கிறார்.
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை 50 கோடிக்கு விலைக்கு வாங்க இன்னும் முயற்சி செய்கிறார்கள். தவெக அரசை செயலிழக்கச் செய்ய வேண்டும் என குறுக்கு வழிகளை பின்பற்றி வருகிறார்கள். பழநி கோயில் நில விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அந்த நில மோசடிக்கு அரசு எந்த விதத்திலும் துணை போகவில்லை.
திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு துறை ஊழலில் திளைத்தது. பத்திரப்பதிவு துறையில் முன்பு அமைச்சராக இருந்த மூர்த்தி ‘மினிஸ்டர் கட்டிங்‘ என பணம் வாங்கினார். ஒவ்வொரு அலுவலகத்திலும் 2 ஆள் போட்டு ‘மினிஸ்டர் கட்டிங்’ என தொகையை வசூலித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இரவு 9 மணி வரை நடைபெற்ற பத்திரப்பதிவு நடைமுறைகள், தற்போது முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளன. புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இனி பத்திரப்பதிவு முறையில் முறைகேடு அல்லது ஊழலில் ஈடுபடும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த துறையிலும் லஞ்சம் கேட்பதாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தவெக ஆட்சியில் கமிஷனே கிடையாது. மேகதாது அணை கட்ட 100 சதவிகிதம் அனுமதிக்க மாட்டோம். இந்த விஷயத்தில் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

