Homeவிளையாட்டுவிம்பிள்டன் 2026: அரையிறுதிக்கு சின்னர், கோகோ காஃப்; ஒசாகா அதிர்ச்சி வெளியேற்றம்

விம்பிள்டன் 2026: அரையிறுதிக்கு சின்னர், கோகோ காஃப்; ஒசாகா அதிர்ச்சி வெளியேற்றம்

அதேசமயம், இந்த தொடரில் கோப்பையை வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜப்பானின் நவோமி ஒசாகா காலிறுதியில் தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்று ஆட்டங்களின் முடிவில் முன்னணி வீரர்களான ஜானிக் சின்னர் மற்றும் கோகோ காஃப் ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

லண்டனில் நடைபெற்று வரும் 2026 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் தற்போதைய சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் தற்சமயம் காலிறுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில், உலகின் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் ஜான்-லெனார்ட் ஸ்ட்ரஃப்பை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கத்தைச் செலுத்திய சின்னர் 7-5, 7-6(4), 6-3 என்ற நேர் செட்களில் ஸ்ட்ரஃப்பை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதனைத் தொடர்ந்து ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில், ஜானிக் சின்னர் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். இரு பெரும் நட்சத்திர வீரர்கள் நேருக்கு நேர் மோதவுள்ளதால், இப்போட்டி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை, சக நாட்டைச் சேர்ந்த இளம் நட்சத்திர வீராங்கனை கோகோ காஃப் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ஜெசிகா பெகுலா 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதன்பின் கம்பேக் கொடுத்த கோகோ காஃப் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய காஃப், மூன்றாவது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் கோகோ காஃப் 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை போராடி வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் அவர் தனது டென்னிஸ் வாழ்க்கையில் முதல் முறையாக விம்பிள்டன் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அதே சமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜப்பானின் நவோமி ஒசாகா, மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா முச்சோவாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முச்சோவா 6-7(4), 4-6 என்ற நேர் செட் கணக்கில் நவோமி ஒசாகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் இத்தொடரில் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நவோமி ஒசாகா ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

ஃபெடரரின் சாதனையை முறியடித்த நோவாக் ஜோகோவிச்; தொடர்ச்சியாக 8ஆவது முறை அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்!
இதனையடுத்து விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் கரோலினா முச்சோவா, அமெரிக்காவின் கோகோ காஃபை எதிர்கொள்ளவுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையேயான இப்போட்டி ஜூலை 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று நடைபெறவிருக்கும் காலிறுதி ஆட்டங்களில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், ஆர்தர் ஃபெரி, ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் விளையாடவுள்ளனர்.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை