Homeஆன்மீகம்தஞ்சை பெரிய கோயில் ஆனி பௌர்ணமி கிரிவலம்: பக்தர்கள் திரளான பங்கேற்பு

தஞ்சை பெரிய கோயில் ஆனி பௌர்ணமி கிரிவலம்: பக்தர்கள் திரளான பங்கேற்பு

தஞ்சை பெரிய கோயிலில் ஆனி பௌர்ணமி கிரிவலம் பக்தி பரவசமாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய’ முழக்கத்துடன் பங்கேற்றனர்.

உலகப் புகழ்பெற்ற, கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்கும் தஞ்சாவூர் பெருவுடையார் (பெரிய கோயில்) கோயில் கி.பி 1006ம் ஆண்டில் மாமன்னன் ராஜராஜசோழனின் ஆட்சியில் கட்டப்பட்டது. இன்றளவும் தமிழரின் கலை, அறிவியல் மற்றும் கட்டடக்கலைக்கு சான்றாக விண்ணுயர்ந்து யுனெஸ்கோவின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு சின்னமாகவும் அரிய பொக்கிஷமாகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இக்கோயில் உலக நாட்டவர்களையும் கவர்ந்திழுக்க முக்கிய காரணம் கட்டுமானம்தான் என்றால் மிகையில்லை. பெரியகோயிலை ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் துணையுடன் அக்குவேறு ஆணிவேராக ஆராய்ச்சி செய்தாலும் கட்டுமான ரகசியம் இன்னும் பிடிபடாமல்தான் உள்ளனர். இத்தகையை பெருமை பெற்ற இக்கோயிலில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு மகா கிரிவலப் பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, “ஓம் நமச்சிவாய” என்ற பக்தி முழக்கத்துடன் சிவபெருமானை வேண்டி கிரிவலம் சென்றனர்.

மாதந்தோறும் நடக்கும் பௌர்ணமி கிரிவலம்

உலகப் பிரசித்திப் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில், மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வது கடந்த சில மாதங்களாக மிகவும் சிறப்பாகவும், விமரிசையாகவும் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையைப் போன்றே, தஞ்சையிலும் பெரிய கோயிலைச் சுற்றி கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில், இந்த ஆனி மாத பௌர்ணமி கிரிவலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து குவிந்த பக்தர்கள்

இந்த ஆன்மீக நிகழ்வில் தஞ்சை மாநகரப் பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் மட்டுமல்லாமல், பக்கத்து மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சிவபக்தர்களும், பொதுமக்களும் மதியத்திலிருந்தே தஞ்சையை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். இதனால் ஒட்டுமொத்த தஞ்சை மாநகரமே ஆன்மீகக் கடலில் மூழ்கியது போல் காட்சியளித்தது.

விடிய விடிய ஒளிர்ந்த மின்விளக்குகள்: பாதுகாப்பு பணியில் போலீசார்

பௌர்ணமி கிரிவலம் செல்வதற்காக நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இடைவிடாது பக்தர்கள் செல்வதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் இரவிலும் எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பாக வலம் வரும் வகையில், கிரிவலப் பாதை முழுவதும் பிரகாசமான தற்காலிக மின் விளக்குகள் மற்றும் உயர்கோபுர விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கூடியதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கவும், போக்குவரத்தைச் சீர்செய்யவும் கிரிவலப் பாதை முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை:

“ஓம் நமச்சிவாய, சிவாய நம ஓம்” என்கிற ஐந்தெழுத்து மந்திரத்தை மனமுருகக் கூறி, பக்தி கோஷத்துடன் பெரிய கோயிலை முழுமையாகச் சுற்றி கிரிவலம் வந்தால், தங்களின் தீராத கஷ்டங்கள் யாவும் தீரும் என்பதும், நினைத்த காரியங்கள் கைக்கூடும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

ஆனி பௌர்ணமியை முன்னிட்டு பெருவுடையார் மற்றும் வாராஹி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. பக்தி பரவசத்துடன், விடிய விடிய நடைபெற்ற இந்த கிரிவல நிகழ்வு தஞ்சை மாநகரையே சிவலோகமாக மாற்றியிருந்தது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை