திருவண்ணாமலை ஆனி பௌர்ணமி கிரிவலத்திற்குப் பிறகு ரயில் நிலையத்தில் கடும் நெரிசல். பயணிகள் ரயிலில் ஏற பக்தர்கள் முண்டியடித்த பரபரப்பு.
விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில்
திருவண்ணாமலை வந்தடைந்ததும் ஒருவருக்கொருவர் தள்ளிக் கொண்டும் ரயில்வே போலீசாரால் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கயிறையும் தாண்டி முண்டியடித்துக் கொண்டும் ரயிலில் ஏறியதால் பரபரப்பு…
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களிலும் பல்வேறு
விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் விழா, ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவ விழா, ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை மாதத்தில் உத்தராயன புண்ணிய காலம் என ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் விமர்சையாக நடைபெறும்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 05:57 மணிக்கு தொடங்கிய ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று அதிகாலை 06:16 மணிக்கு நிறைவடையும் என திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று காலை முதல் இரவு விடிய விடிய பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து நமசிவாய மந்திரத்தை ஜெபித்தபடி பௌர்ணமி நிலவு ஒளியில் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர்.
விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் விடியற்காலை முதல் குவிந்தனர்.
ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்த நிலையில் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை வழியாக காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது.
திருவண்ணாமலை வந்தடைந்த ரயிலில் பௌர்ணமி கிரிவலம் முடித்து ரயில் நிலையத்தில் காத்திருந்த ஏராளமான பயணிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும், முண்டியடித்து கொண்டும் ரயிலில் ஏறினர். பயணிகளை கட்டுப்படுத்தும் விதமாக ரயில்வே போலீசார் நீண்ட நெடுதூரத்திற்கு தடுப்பு கயிறு அமைத்திருந்த வேளையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பக்தர்கள் தங்கள் ஊருக்கு செல்வதற்காக காவல்துறையினரின் தடுப்பு கயிறையும் தாண்டி ரயிலில் இடம் பிடிக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

