திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பங்கேற்று, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக, குடிநீர் வழங்கல் திட்டங்கள், வீட்டு வசதித் திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், ஊரகச் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் உள்ளிட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்து துறை அலுவலர்களிடம் அமைச்சர் விரிவான விளக்கங்களை கேட்டறிந்தார்.
மேலும், பல்வேறு திட்டங்களில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து நிறைவு செய்து, பொதுமக்களுக்கு திட்டங்களின் முழுப் பயனும் காலதாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் அறிவுறுத்தினார்.
புதிய குடிநீர் இணைப்புகளை விரைந்து வழங்குதல், வீட்டு வசதித் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை காலக்கெடுவிற்குள் நிறைவு செய்தல், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் திட்டங்களின் தரத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தினார்.
மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் விரைவாகவும் தரமான முறையிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் தலைமையிலான அரசின் முக்கிய நோக்கம் என்பதை மாண்புமிகு அமைச்சர் இக்கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி. த. சுவாதி ஸ்ரீ, மாண்புமிகு சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் மு. ரவிசங்கர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கு.ப. கிருஷ்ணன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

