கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் நடைபெற உள்ள கோடை விழாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரிக்கை
சிறு, குறு விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி ஜமுனாமரத்தூரில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவு விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் N.ராஜா தலைமை வகித்தார். ஜமுனாமரத்தூர் பேருந்து நிலையம் அருகில் தொடங்கிய பேரணி, முக்கிய சாலைகள் வழியாகச் சென்று ஜமுனாமரத்தூர் மலைவாழ் மக்கள் கூட்டுறவு சங்கம் முன்பு நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், சிறு மற்றும் குறு விவசாயிகளின் கூட்டுறவு விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால், ஜவ்வாது மலை கோடை விழாவின் போது விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், தொடர்ந்து சென்னை கோட்டையை நோக்கி கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

