Homeஅரசியல்அமைச்சர் பதவி பறிக்கப்படும்! லஞ்சம், ரீல்ஸ் அரசியலுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை

அமைச்சர் பதவி பறிக்கப்படும்! லஞ்சம், ரீல்ஸ் அரசியலுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை

அமைச்சர் பதவி பறிக்கப்படும்!”.. லஞ்சம், ரீல்ஸ் ஆசைக்கு தடை.. அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற தவெக அரசின் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்தில், லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களில் சிக்கினால் அடுத்த கணமே அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுக்குக் எச்சரித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற தவெக அரசின் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்தில், வழக்கத்திற்கு மாறாக முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுக்குக் கடுமையான எச்சரிக்கைகளையும், அதிரடி அறிவுறுத்தல்களையும் பிறப்பித்துள்ளார். லஞ்சம், ஊழல் புகார்கள் எழுந்தால் அடுத்த கணமே அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்றும், அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், மாவட்டங்களில் ஆய்வு என்ற பெயரில் அரசுப் பள்ளிகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கும், அதை “ரீல்ஸ்” வீடியோக்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்வதற்கும் அவர் அதிரடியாகத் தடை விதித்துள்ளார்.

தனது தலைமையிலான தவெக அரசு முற்றிலும் வெளிப்படைத்தன்மை கொண்ட மக்கள் அரசாக இருக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக உள்ளார். இன்றைய கூட்டத்தில் பேசிய அவர், “எந்தவொரு துறையிலாவது முறைகேடு அல்லது ஊழல் புகார்கள் பெரிய அளவில் எழுந்தால், அதற்குப் பொறுப்பேற்று அந்தத் துறையின் அமைச்சர் உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்படுவார். தவறு செய்பவர்கள் நீண்ட கால மக்கள் இயக்கத் தோழராக இருந்தாலும் சரி, மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவராக இருந்தாலும் சரி. தெரிந்தவர் தெரியாதவர் என்ற பாகுபாடின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஒருசில அமைச்சர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் மாவட்டங்களில் ஆய்வு என்ற பெயரில் செய்த சில செயல்கள் அரசுக்குத் தேவையற்ற அதிருப்தியை ஏற்படுத்தியதை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். அமைச்சர்களோ அல்லது கட்சித் தலைவர்களோ அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்குள் சென்று தேவையற்ற ஆய்வுகளை நடத்தக் கூடாது. குறிப்பாக, மாணவர்கள் படிக்கும் நேரத்தில் பள்ளிகளுக்குள் நுழைந்து இடையூறு விளைவிக்கக் கூடாது என எச்சரித்துள்ளார். (ஏற்கனவே பள்ளிகளுக்குள் சென்று முதலமைச்சர் படம் மாட்டியது, பேச்சை நேரலை செய்தது போன்ற செயல்களில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் தவெக மாவட்டச் செயலாளர்கள் மீது விஜய் நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது).

ஆய்வுக்குச் செல்வதை “ரீல்ஸ்” வீடியோக்களாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், விளம்பர மோகத்தைக் கைவிட்டுப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்ட சில அமைச்சர்களைக் குறிப்பிட்டு விஜய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தின் போது ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிந்து, அவற்றை முழுமையாகக் களைந்து அரசுக்குக் கூடுதல் வருவாயை ஈட்டித் தருவதில் அமைச்சர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை இருக்க வேண்டும் என நிதித்துறைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் தகவல்களை முன்வைத்து முதலமைச்சர் அறிவுறுத்தினார். எந்த அமைச்சர் தனது துறையின் முறைகேடுகளை ஒழித்து அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தருகிறார் என்பதைத் தான் தனிப்பட்ட முறையில் கவனிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து மட்டுமே பேசப்பட்ட நிலையில், இன்றைய கூட்டம் முழுக்க முழுக்க அமைச்சர்களை நல்வழிப்படுத்தும் ஒரு “எச்சரிக்கை கூட்டமாகவே” முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைந்து முடிந்துள்ளது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை