ஜூலை 1, 2026 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள அகவிலைப்படி (DA) உயர்வை கணக்கிடுவதற்கு தேவையான காரணிகளில் AICPI-IW தரவும் முக்கியமானது. முன்னதாக, ஏப்ரல் 2026 வரையிலான AICPI-IW தரவுகளின் அடிப்படையில், அடிப்படை ஊதியத்தில் 3% அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஜூலை மாத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் AICPI-IW தரவு நேற்று வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில் ஜூலை 2026 -இல் 3% அகவிலைப்படி உயர்வு இருக்கலாம் என அனுமானிக்கப்படுகின்றது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழிலாளர் நலப் பணியகம் (Labour Bureau), செவ்வாய்க்கிழமை, ஜூன் 30, 2026 அன்று, மே 2026-க்கான அகில இந்தியத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டில் (AICPI-IW) 0.9 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
ஜூலை 2026 டிஏ உயர்வு முக்கிய அம்சங்கள்
தொழிலாளர் அமைச்சகம் மே 2026-க்கான அகில இந்தியத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
AICPI-IW குறியீடு 0.9 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
இதன் அடிப்படையில் ஜூலை மாதம் 3% டிஏ உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்படுகின்றது.
அகவிலைப்படி ஊழியர்களுக்கு பணவீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கும் முக்கிய படியாக உள்ளது.
“மே 2026-க்கான அகில இந்திய AICPI-IW குறியீடு 0.9 புள்ளிகள் அதிகரித்து 150.8 புள்ளிகளாக (நூற்று ஐம்பது புள்ளி எட்டு) இருந்தது,” என்று தொழிலாளர் நலப் பணியகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. மே 2025-ல் 2.93% ஆக இருந்த பணவீக்க விகிதத்துடன் ஒப்பிடுகையில், மே 2026-ல் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்க விகிதம் 4.72% ஆக இருந்தது.
அகவிலைப்படி உயர்வை தீர்மானிக்கும் AICPI-IW தரவு
ஜூலை 1, 2026 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள அகவிலைப்படி (DA) உயர்வை கணக்கிடுவதற்கு AICPI-IW தரவு பயன்படும். முன்னதாக, ஏப்ரல் 2026 வரையிலான AICPI-IW தரவுகளின் அடிப்படையில், அடிப்படை ஊதியத்தில் 3% அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. மே 2026-ல் AICPI-IW-இல் மேலும் உயர்வு ஏற்பட்ட பின்னரும் இந்தக் கணிப்பில் மாற்றம் ஏதுமில்லை. இதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம்.
ஏப்ரல் மாத AICPI-IW தரவு
ஏப்ரல் மாதத்தில், AICPI-IW குறியீடு 0.8 புள்ளிகள் அதிகரித்து 149.9 புள்ளிகளாக உயர்ந்தது.
மார்ச் 2026-ல் இது 149.1 புள்ளிகளாக இருந்தது.
அதற்கு முன், பிப்ரவரி மாதத்தில் இக்குறியீடு 148.5 புள்ளிகளாக இருந்தது.
ஜனவரி குறியீடு 148.6 புள்ளிகளாக இருந்தது.
கடந்த ஆண்டு, டிசம்பர் 2025-க்கான AICPI-IW குறியீடு 148.2 புள்ளிகளாக இருந்தது.
நவம்பர் மற்றும் அக்டோபர் 2025-ல், பணவீக்கக் குறியீடு முறையே 0.5 புள்ளிகள் மற்றும் 0.4 புள்ளிகள் அதிகரித்தது.
DA Hike: மே 2026க்கான AICPI-IW தரவு டிஏ உயர்வு கணக்கீட்டை எப்படி பாதிக்கும்?
7வது ஊதியக் குழு விதிமுறைகளின்படி, ஜூலை 1, 2026 முதல் டிஏ உயர்வு கணக்கீட்டில், மே 2026க்கான AICPI-IW தரவின் தாக்கம் இருக்கும். டிஏ உயர்வு பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்தி கடந்த 12 மாதங்களின் AICPI-IW தரவைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகின்றது.
அகவிலைப்படி = [{(கடந்த 12 மாதங்களின் சராசரி AICPI-IW x 2.88)−261.41}/261.41]×100-தற்போதுள்ள DA(%)
கடந்த சில மாதங்களாக AICPI-IW குறியீடு அதிகரித்து வருகின்றது. அந்த நிலையில், மேலே உள்ள சூத்திரத்தின்படி முழு கணக்கீட்டிற்கு ஜூன் 2026க்கான தரவுகளும் தேவைப்படும். மே 2026 இல் இருந்த அதே விகிதத்தில் ஜூன் மாதத்தில் AICPI-IW குறியீடும் அதிகரிக்கும் என வைத்துக்கொண்டால், கணக்கீடு பின்வருமாறு இருக்கும்.
AICPI-IW தரவு
மாதம்
AICPI-IW குறியீட்டு தரவு
மே 2025 144
ஜூன் 2025 145
ஜூலை 2025 146.5
ஆகஸ்ட் 2025 147.1
செப்டம்பர் 2025 147.3
அக்டோபர் 2025 147.7
நவம்பர் 2025 148.2
டிசம்பர் 2025 148.2
ஜனவரி 2026 148.6
பிப்ரவரி 2026 148.5
மார்ச் 2026 149.1
ஏப்ரல் 2026 149.9
மே 2026 150.8
ஜூன் 2026 151.7 (மதிப்பீடு)
சராசரி 148.63 (மதிப்பீடு)
இந்த கணக்கீட்டின் படி, கடந்த 12 மாதங்களுக்கான (ஜூலை 2025 முதல் ஜூன் 2026) சராசரி AICPI-IW குறியீடு 148.63 ஆகும். ஜூலை 2026 -இல் எதிர்பார்க்கப்படும் உயர்வைக் கணிக்க, இந்த மதிப்பை மேலே உள்ள சூத்திரத்தில் பயன்படுத்தலாம்:
அகவிலைப்படி = [{(148.63 x 2.88)−261.41}/261.41}×100]-60%
அகவிலைப்படி = 3.73%
இருப்பினும், அரசு வழக்கமாக தசம புள்ளிக்குப் பிந்தைய எண்களைக் கீழ்நோக்கிய அருகிலுள்ள மதிப்பிற்கு முழுமையாக்குகிறது (round off). அதன் அடிப்படையில், அகவிலைப்படி உயர்வு 3% ஆக இருக்கும் என அனுமானிக்கப்படுகின்றது. இது ஜூன் மாதத்தில் நாம் கணக்கிட்ட அகவிலைப்படி உயர்வு மதிப்பீட்டிற்கு இணையானதாகும்.
குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள கணக்கீடு அகவிலைப்படி உயர்வைக் கணக்கிடும் முறையைப் புரிந்துகொள்வதற்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்வது நல்லது. இறுதி உயர்வு சதவீதம் பல காரணிகளைச் சார்ந்து இருக்கும். இது பிரதமரின் தலைமையிலான மத்திய அமைச்சரவையால் தீர்மானிக்கப்படுகிறது.

