தமிழ்நாட்டில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் தனித்து போட்டியிட உள்ளதாக சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கூறியுள்ள வீரபாண்டியன், தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடித்துள்ளது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் தவெக ஆட்சிக்கு சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ளன. இதனிடையே தவெக புதிய கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறது.
இதற்காக 2 வாரங்களுக்கு முன் தனியார் விடுதியில் முதல்வர் விஜய், ப.சிதம்பரம், திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆலோசித்தனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இரு கட்சிகளுமே அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறி, முன்கூட்டியே முதல்வர் விஜய்யை தனித்து சந்தித்தனர்.
இந்த நிலையில் சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாட்டில் இடதுசாரிகளின் பலத்தை அறிய வேண்டி இருப்பதால், உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிட இருக்கிறோம். எங்களுக்கு மாநிலம் முழுவதும் கட்டமைப்பு இருக்கிறது. மாநில முழுவதும் தொண்டர்கள் பரவி இருக்கிறார்கள்.
எங்களின் கட்டமைப்பை சோதிக்க விரும்புகிறோம். அதேபோல் விரைவில் நடக்கவுள்ள இடைத்தெர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் தான் அதுதொடர்பாக முடிவு செய்வோம். அதேபோல் தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடக்கிறது. அதற்கு நீங்களும், நானுமே ஒரு சாட்சி தான். நம் கண்முன் நடந்து வருகிறது. அதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.
வடமாநிலங்களில் இருந்து இந்த குதிரை பேர கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டிற்கும் பரவி இருக்கிறது. இதனை தடுப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு நல்லது என்று தெரிவித்துள்ளார். தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ள சிபிஎம் நேரடியாக குதிரை பேரம் நடப்பதாக கூறியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் அதிமுகவில் இருந்து 6 எம்எல்ஏ-க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இன்னும் சிலர் வரும் நாட்களில் இதே ஸ்டைலை பின்பற்றி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வீரபாண்டியனின் கருத்து பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

