14 வயதே நிரம்பிய இந்திய சிறுவனான ஜெயினம் ஜெயின், சொந்தமாக ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி, புர்ஜ் கலிஃபாவில் தன்னுடைய ஆபிஸை தொடங்கியிருக்கிறார்.
சமீப காலமாக, எங்கு திரும்பினாலும் AI மயமாகத்தான் இருக்கிறது. இதை சுற்றிதான், உலகப்பொருளாதார சந்தையும் சுழல்கிறது. இதனாலேயே, ஏற்கனவே வெவ்வேறு துறைகளில் இருப்பவர்களும் AI குறித்து பயில்வது, இது குறித்த புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது என்றிருக்கின்றனர். AI, ஸ்டார்ட்-அப் துறையிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
நாம் பள்ளிகளில் படிக்கும் போது, தெரிந்த விளையாட்டுகளை விளையாடிக்கொண்டும், அன்றைக்கு கொடுத்த வீட்டுப்பாடத்தை முடித்துக்கொண்டும், வீக் எண்ட்களில் டிவியை பார்த்துக்கொண்டும் இருப்போம். ஆனால், இப்போதைய குழந்தைகள் அப்படியில்லை. பெற்றோர் பலர், தங்களின் குழந்தைகளுக்கு படிப்பைத்தாண்டி ஏதேனும் ஒரு கலையை அல்லது திறனை வளர்த்து விடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு ஒரு இந்திய சிறுவன், 14 வயதிலேயே உலக வணிக அரங்கை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
உலகின் மிக உயரமான கட்டடங்களுள் ஒன்றாக இருக்கிறது, புர்ஜ் கலிஃபா. துபாயில் இருக்கும் இந்த கட்டடம், அந்த நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலமாகவும் பார்க்கப்படுகிறது. இது, அந்த நாட்டின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்த புர்ஜ் கலிஃபாவின் வளாகத்தில், ‘மெங்கோ இன்ஜின்’ என்கிற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை ஒரு 14 வயது சிறுவன் நிறுவியுள்ளார் என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா?
அந்த சிறுவனின் பெயர், ஜெயினம் ஜெயின். இவர், புர்ஜ் கலிஃபாவின் 141வது மாடியில் தன்னுடைய ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி, உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். இந்த நிறுவனமானது, பல வணிக நிறுவனங்கள், தங்களுடைய மார்க்கெட்டிங் தொழிலை வளர்க்கவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் உதவுகிறது.
“ஏற்கனவே போட்டி நிறைந்த உலகில், நீ யாரடா பொடியன்?” என்றுதான், பிற தொழில் முனைவோர் ஆரம்பத்தில் இந்த பையனை பார்த்தார்கள். ஆனால், இந்த சிறுவனின் குட்டி வரலாற்றை கொஞ்சம் புரட்டிப்பார்த்தால் கண்டிப்பாக இவரை லேசாக எடைப்போடக்கூடாது என்பது நமக்கு தெரியும். இந்த சிறுவன், 6 வயதாக இருக்கும் போதே, அவருடைய தந்தை அவரைத்தன்னுடைய முதல் பிசினஸ் மீட்டிங்கிற்கு அழைத்து சென்றிருக்கிறார். இதனால், இந்த சிறுவனுக்கு தொழில்கள் எப்படி இயங்குகிறது என்பது தெரிந்துகொள்ளும் ஆர்வம் பிறந்திருக்கிறது.
இவர், தன்னுடைய 13வது வயதில், வெறும் 105 நாட்களே படித்து 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார். இவருடைய அறிவானது பள்ளி வகுப்பறைகளோடு நின்று விடவில்லை. வாழ்வின் நடைமுறை அறிவை பெறுவதிலும் ஆர்வம் காட்டிய இவர், பிறரை சந்தித்து பேசவும் ஆர்வம் மிக்கவராக மாறியிருக்கிறார்.
ஸ்டார்ட் அப் நிறுவனத்தை கண்டு பிடித்ததுடன், ஜெயினமின் திறமை நின்று விடவில்லை. இவரது பெயரில், ஏற்கனவே 2 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டு, 3 காப்புரிமைகள் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டுள்ளன. இவர், சர்வதேச கருத்தரங்காக கருதப்படும் TEDx மேடையிலும் உரையாற்றியிருக்கிறார். மேலும், சொந்தமாக ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். இவர் வைத்திருக்கும் யூடியூப் சேனலுக்கு 1,45,000க்கும் மேற்பட்ட சப்ஸ்க்ரைபர்ஸ்கள் உள்ளனர்.
இவர், 10 வயது முதலே 50 நாட்களில் 50 புத்தகங்களை படிப்ப்து, 50 நெட்வொர்கிங் நிகழ்வுகளில் கலந்து கொள்வது, இந்தியா முழுவதும், 6,000 கி.மீ வரை பயணம் செய்து பிறரை சந்திப்பது உள்ளிட்ட பெரிய பெரிய சவால்களை வெற்றிகரமாக செயல்படுத்தி முடித்திருக்கிறார். இவரது இந்த இமாலைய சாதனைகளை பார்க்கும் போது, கண்டிப்பாக நம்மையே அறியாமல், “அடேங்கப்பா” என கூறுவோம். இப்படி பல திறமைகளில் அசத்தும் இவரை பலர் ஆச்சரியத்துடன் வியந்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

