தனியார் பள்ளி வேன் பாதுகாப்பு அலட்சியம், 2ம் வகுப்பு மாணவன் மீது டூவீலர் மோதி காயம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு டவுன் வந்தவாசி சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளி வேனில் இருந்து மாணவர்கள் இறக்கப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது மாணவர்களை பாதுகாப்பாக இறக்கி சாலையை கடக்க செய்ய வேண்டிய பணியாளர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேனில் இருந்து இறங்கிய 2ம் வகுப்பு மாணவன், வேனின் முன்புறம் வழியாக சாலையை கடக்க முயன்றபோது, வேனின் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மாணவன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவன் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பள்ளி வேன்களில் மாணவர்களை ஏற்றும், இறக்கும் நேரங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டியது கட்டாயம். ஆனால், பணியாளர்களின் அலட்சியமும், ஓட்டுநரின் பொறுப்பற்ற செயல்பாடும் ஒரு சிறுவனின் உயிரையே ஆபத்தில் தள்ளியுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

