Homeசெய்திகள்தமிழகத்தில் 950 புதிய MBBS இடங்கள்: 2026-27ல் மொத்தம் 13,999 மருத்துவ இடங்கள்!

தமிழகத்தில் 950 புதிய MBBS இடங்கள்: 2026-27ல் மொத்தம் 13,999 மருத்துவ இடங்கள்!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கூடுதலாக 950 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கூடுதல் இடங்களில், மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 13 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. மேலும், ஒரு புதிய தனியார் மருத்துவக் கல்லூரியும் இந்தக் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், 2026–27 கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் (MBBS) மாணவர் சேர்க்கைக்காக மொத்தம் 13,999 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் (NMC) தெரிவித்துள்ளது. 2026–27 கல்வியாண்டில் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்பிபிஎஸ் இடங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கூடுதலாக 950 எம்.பி.பி.எஸ் இடங்கள் ஒதுக்கீடு:
அதில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கூடுதலாக 950 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கூடுதல் இடங்களில், மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 13 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. மேலும், ஒரு புதிய தனியார் மருத்துவக் கல்லூரியும் இந்தக் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்றுள்ளது.

கடந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 77 மருத்துவக் கல்லூரிகளில் 13,049 எம்பிபிஎஸ் இடங்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 13,999 இடங்களாக உயர்ந்துள்ளது.

இந்திய அளவில், 2026–27 கல்வியாண்டில் 529 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிதாக 9,911 எம்பிபிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 211 அரசு மருத்துவக் கல்லூரி இடங்களும் அடங்கும். இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 1,36,939 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாமக்கல், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 100-இல் இருந்து 150-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் 150 கூடுதல் இடங்கள் உருவாகியுள்ளன.

அதேபோல், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 800 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இந்தக் கல்வியாண்டில் மொத்தம் 950 புதிய எம்பிபிஎஸ் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு நடத்தும் அகில இந்திய மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை, நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறுகிறது. அந்தக் கலந்தாய்வில் மாநில அளவிலான இடஒதுக்கீடு நடைமுறையில் இல்லை. மேலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டு கல்விக் கட்டணம் குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாநில தனியார் பல்கலைக்கழகங்கள் 60 சதவீதம் வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களை வழங்குகின்றன. அதே நேரத்தில், 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையையும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டையும் பின்பற்றி வருகின்றன.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களில் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.4.35 லட்சம் முதல் ரூ.5.40 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.15 லட்சம் முதல் ரூ.16.20 லட்சம் வரை உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அஞ்சுகா ராஜா
அஞ்சுகா ராஜாhttps://athirai.com
தமிழ் அரசியல் மற்றும் சினிமா செய்திகளில் அனுபவமுள்ள செய்தியாளர்.
தொடர்புடைய கட்டுரைகள்
சமீபத்திய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் வாசிக்கப்பட்டவை